உலகம்
கோயில்

ஒமைக்ரான் பரவும் அபாயம்- பீஜிங்கில் கோயில்கள் மூடப்பட்டன

Published On 2022-01-16 12:27 GMT   |   Update On 2022-01-16 12:27 GMT
கொரோனா கால கட்டுப்பாடுகளால் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகளால் நிலைமை இன்னும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.
பீஜிங்:

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் பீஜிங்கில் முதல் ஒமைக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட முதல் நபர், கடந்த 14 நாட்களில் பல்வேறு மால்கள் மற்றும் உணவகங்களுக்கு சென்றுள்ளார். இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அந்த நபர் நகரை விட்டு வெளியில் செல்லவில்லை. எனவே, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் தொற்று குறைந்தது ஐந்து மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா கால கட்டுப்பாடுகளால் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில், நிலைமை இன்னும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது. சீனா முழுவதும் மொத்தம் எத்தனை நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பதை சீனா வெளியிடவில்லை.
 
பீஜிங்கில், ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட ஹைடியன் மாவட்டத்தில் சுமார் 13,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கும் பாதிப்பு இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரத்தில் உள்ள சில வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. பூஜை செய்வதற்கு மட்டுமே அனுமதி, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

மத்திய பீஜிங்கில் உள்ள திபெத்திய புத்த மடாலயமான லாமா கோயில், கொரோனா தொற்றுநோய் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் கூறி உள்ளது. 
Tags:    

Similar News