உலகம்
ஜோ பைடன் - விளாடிமிர் புதின்

உக்ரைன் பிரச்சினைக்கு மத்தியில் அமெரிக்க, ரஷிய அதிபர்கள் நாளை பேச்சுவார்த்தை

Published On 2021-12-06 03:27 GMT   |   Update On 2021-12-06 03:27 GMT
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நாளை காணொலி காட்சி வழியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:

சோவியத் யூனியன் உடைந்த பின்னர் ரஷியாவசம் இருந்த உக்ரைன் பிரிந்து தனி நாடானது. இந்தநிலையில் 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவுடன் இணைந்தது. அதில் இருந்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா பெரியதொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு, உக்ரைன் எல்லையில் போர் தளவாடங்களையும், ஏறத்தாழ 1 லட்சம் வீரர்களையும் களமிறக்கி இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. இதற்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறினார். ரஷியாவின் செயலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். ஆனால் ரஷியா அத்தகைய நோக்கத்தை மறுத்தது. உக்ரைன்தான் தன் சொந்த படை பலத்தை பெருக்கி வருவதாக கூறியது.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பு பற்றி வெள்ளை மாளிகை அறிக்கையில் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, “உக்ரைன் எல்லையில் ரஷிய ராணுவ நடவடிக்கைகள் குறித்த அமெரிக்காவின் கவலைகளை ஜனாதிபதி ஜோ பைடன், ரஷிய அதிபர் புதினிடம் எடுத்துக் கூறுவார். மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவார்” என தெரிவித்தார்.
Tags:    

Similar News