செய்திகள்
கோவேக்சின் தடுப்பூசி

வருகிற 30-ந்தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு கனடாவில் அனுமதி

Published On 2021-11-21 03:34 GMT   |   Update On 2021-11-21 03:34 GMT
கனடாவில் வருகிற 30-ந் தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா:

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோவேக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்தன.

அதே போல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் தற்போது இந்த 2 தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

இவற்றில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பல நாடுகள் அனுமதியளித்தன, உலக சுகாதார அமைப்பும் அனுமதியளித்து. ஆனால், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது.

இதனால் உலக நாடுகள் பலவும் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டவர்களை, தடுப்பூசி போடாதவர்களாகவே கருதி தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தன.

இந்த சூழலில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த மாத தொடக்கத்தில் ‘கோவேக்சின்’ தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.

இதை தொடர்ந்து, ‘கோவேக்சின்’ தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.



அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்ட நபர்கள் வருகிற 30-ந்தேதி கனடாவுக்கு வரலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுவரை அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கோவேக்சின் தடுப்பூசிக்கு கனடா அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. கோவேக்சின் தவிர சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் கனடா அனுமதி அளித்துள்ளது.

அதன்படி கோவேக்சின், சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்ட நபர்கள் வருகிற 30-ந்தேதி முதல் கனடாவில் அனுமதிக்கப்படுவார்கள்.

நேற்று வரை கனடாவில் 17 லட்சத்து 62 ஆயிரத்து 434 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 29 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News