செய்திகள்
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்

தடுப்பூசி போடாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஜெர்மனி

Published On 2021-11-19 08:04 GMT   |   Update On 2021-11-19 08:04 GMT
புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.
பெர்லின்:

ஜெர்மனியில் கொரோனா தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. 

தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான கட்டுப்பாடுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த விதிமுறையின்படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் சில இடங்களில் இருந்து விலக்கப்படுவார்கள்.

கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமாக உள்ளதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார். புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜெர்மனியில் நேற்று 65,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து அதிக அளவிலான தினசரி பாதிப்பு ஆகும்.

Tags:    

Similar News