செய்திகள்
ஆசிரியர்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் ஆசிரியர் குடும்பங்கள் பட்டினி -தெருவில் இறங்கி போராட்டம்

Published On 2021-10-22 16:57 GMT   |   Update On 2021-10-22 16:57 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அங்கு இன்னும் முறையான அரசு உருவாக்கப்படாததால் குழப்பமான நிலை நிலவுகிறது.
காபூல்:

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலிபான்கள் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து அங்கு பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வங்கிகளில் பணம் இல்லை. எனவே வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தையும் யாரும் எடுக்க முடியாத  நிலை உள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு சம்பளம் வழங்கப்படவில்லை.

அங்குள்ள ஹெராத் மாகாணத்தில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். 
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பே ஒரு மாதம் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகஸ்டு மாதம் தலிபான்கள் தாக்குதலை தொடங்கியதால் அப்போதும் சம்பளம் வழங்கப்படவில்லை. பின்னர் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அதன் பிறகு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் பல குடும்பங்களில் வறுமை வாட்டுகிறது. அவர்கள் வங்கியில் வைத்துள்ள பணத்தையும் எடுக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதையடுத்து ஹெராத்தில் நேற்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். பின்னர் தலிபான் பிரதிநிதிகளிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.  நீண்ட காலமாக சம்பளம் இல்லாததால் எங்கள் குடும்பங்கள் பட்டினி கிடக்கின்றன. வங்கியில் இருந்தும் பணம் எடுக்க முடியாததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே உடனடியாக சம்பளத்தை வழங்குங்கள் என்று கூறி இருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள டாக்டர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள்.  அங்கு இன்னும் முறையான அரசு உருவாக்கப்படாததால் முற்றிலும் குழப்பமான நிலை நிலவுகிறது. சர்வதேச உதவிகளும் சரியாக கிடைக்கவில்லை. தலிபான்களின் ஆட்சியும் ஏனோதானோவென்று இருக்கிறது.  இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அவர்கள் கடுமையான தண்டனை கொடுப்பார்கள் என்ற பயத்தால் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
Tags:    

Similar News