செய்திகள்
வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை அதிகாரிகளாக மேலும் 3 இந்தியர்கள் நியமனம்

Published On 2021-10-19 10:08 GMT   |   Update On 2021-10-19 10:11 GMT
வெள்ளை மாளிகையில் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையில் அவ்வப்போது பல்வேறு துறை நிபுணர்களை அதிகாரிகளாக நியமனம் செய்கிறார்கள்.

அதன்படி தற்போது 19 இளம் நிபுணர்களை பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் அதிகாரிகளாக (பிரதிநிதிகள்) நியமித்துள்ளனர். அதில் 3 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் ஜாய் பாசு, சன்னிபட்டேல், ஆகாஷ் ஷா என்பது தெரியவந்துள்ளது. வெள்ளை மாளிகையில் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக இருக்கிறார். இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 3 இந்தியர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜாய் பாசு இதற்கு முன்பு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தார். உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையில் தலைவராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.

பெண் நிபுணரான ஜாய் பாசு ஏற்கனவே உலக பொருளாதார மன்றத்தில் வேளாண்மை திட்ட மேலாளராக பணியாற்றியவர் ஆவார்.

சன்னிபட்டேல் மனநல மருத்துவர் ஆவார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சேவை செய்யும் சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்தியா, தாய்லாந்து, டொமினிக்கன் குடியரசு நாடுகளில் சேவை பணிகளை செய்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி உள்ளார்.

ஆகாஷ் ஷா மருத்துவம் படித்தவர். உடல் நலம் மற்றும் மனித சேவைகள் துறையில் பணியாற்றி வந்தார். கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

Tags:    

Similar News