செய்திகள்
தாக்குதல் (கோப்பு படம்)

ஏமனில் சவுதி கூட்டுப்படை அதிரடி வான் தாக்குதல்- 160 கிளர்ச்சியாளர்கள் பலி

Published On 2021-10-16 16:43 GMT   |   Update On 2021-10-16 16:43 GMT
மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.
ரியாத்:

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சண்டையின்போது 11 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது. 

மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் சவுதி  கூட்டுப்படை  தெரிவித்துள்ளது. அப்தியா நகர் மரிப் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
Tags:    

Similar News