செய்திகள்
பிரிட்னி ஸ்பியர்ஸ்

உலகப்புகழ் பெற்ற பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2021-10-01 02:41 GMT   |   Update On 2021-10-01 02:41 GMT
தனது தந்தை, பாதுகாவலர் என்கிற நிலையைத் தவறாகப் பயன்படுத்தி தனது வாழ்க்கையையே அழித்து வருவதாகவும், அவரைப் பாதுகாவலர் என்ற நிலையில் இருந்து அகற்றுமாறு பிரிட்னி ஸ்பியர்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் :

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்னி ஸ்பிரியர்ஸ். தனது கணவரை விவாக ரத்து செய்தபின்னர், இவர் மனதளவில் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கூறி இவரது பாதுகாவலராக தந்தை ஜேமி ஸ்பியர்ஸ்சை 2008-ம் ஆண்டு கோர்ட்டு நியமித்தது. ஆனால் தனது தந்தை, பாதுகாவலர் என்கிற நிலையைத் தவறாகப் பயன்படுத்தி தனது வாழ்க்கையையே அழித்து வருவதாகவும், அவரைப் பாதுகாவலர் என்ற நிலையில் இருந்து அகற்றுமாறும் பிரிட்னி ஸ்பியர்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

உலகமெங்கும் உள்ள பிரிட்னி ஸ்பியர்ஸ் ரசிகர்கள் ‘பிரி பிரிட்னி’ என்ற பிரசாரத்தின் மூலம் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த வழக்கில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகி 20 நிமிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், “என் வாழ்க்கை எனக்கு திரும்பக் கிடைக்க வேண்டும். இந்த பாதுகாவலர் ஏற்பாடு தவறானது என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்” என கூறினார். மறுபடியும் ஜூலை மாதம் 14-ந் தேதி அவர் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி தனது தந்தை பாதுகாவலர் என்ற நிலையை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு நீதிபதி பிரெண்டா பென்னி, பிரிட்னி ஸ்பியர்சை அவரது தந்தையின் பாதுகாப்பில் இருந்து விடுவித்து நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் பாதுகாப்பை இனி அவரது சட்டக்குழுவால் நியமிக்கப்பட்ட கணக்காளர் ஜான் ஜாபெல் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்னி ஸ்பியர்சுக்கு பெருத்த நிம்மதியை அளித்துள்ளது.
Tags:    

Similar News