செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

பிரச்சினை கோவிஷீல்டு அல்ல, இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் தான்- பிரிட்டன் சொல்கிறது

Published On 2021-09-22 10:32 GMT   |   Update On 2021-09-22 11:38 GMT
பிரிட்டனில் கோவிஷீல்டை அங்கீகரிக்காவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தன் சிரிங்கலா எச்சரித்தார்.
லண்டன்:

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் அந்த வழிகாட்டு நெறிமுறையை  அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் எலிசபெத் ட்ரஸ் இதுபற்றி பேசுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிரிட்டன் வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். 

இது இந்தியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் கோவிஷீல்டை அங்கீகரிக்காதது பாரபட்சமான செயல் என்றும், இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பரஸ்பர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தன் சிரிங்கலா எச்சரித்தார்.

இவ்வாறு இந்தியாவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பிரிட்டன் அரசு, கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால், இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் "தடுப்பூசி சான்றிதழ் சிக்கல்கள்" காரணமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 



எனவே, பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தலுக்கான பிரச்சினை தீர்க்கப்படாததால் பிரிட்டன் செல்ல விரும்புவோர்  பிரிட்டனின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். 

தடுப்பூசி சான்றிதழ் அங்கீகாரத்தை விரிவுபடுத்த இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் கொரோனா கோவின் ஆப் மற்றும் இணையதளம் மூலம் தடுப்பூசி சான்றிதழ்  வழங்கும் பணி ஒருங்கிணைந்து நிர்வகிக்கப்படுகிறது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை என தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்எஸ் ஷர்மா கூறி உள்ளார்.

Tags:    

Similar News