செய்திகள்
ஜஸ்டின் ட்ருடோ

கனடா பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கட்சி வெற்றி

Published On 2021-09-21 09:00 GMT   |   Update On 2021-09-21 09:00 GMT
பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.
டொராண்டோ:

கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை.

ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி 155 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இதனால் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ நீடித்தார்.

இதற்கிடையே பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்துவதை விரும்பாத ஜஸ்டின் ட்ருடோ முன் கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி கனடா பாராளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஜஸ்டின் ட்ருடோ (லிபரல் கட்சி), எரின் ஓடூல் (கன்சர்வேட்டிங் கட்சி) ஆகியோர் மல்லுக்கட்டினர்.

கனடா பாராளுமன்ற தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.


கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்த 4 ஆண்டுகள் சிறுபான்மை அரசின் பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார்.

தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, “நன்றி கனடா. உங்கள் வாக்கை அளித்ததற்காக, லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரகாசமான எதிர்காலத்தை தேர்ந்தெடுத்தற்காக நன்றி. நாம், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தை முடிக்க போகிறோம். நாம் கனடாவை முன்னோக்கி கொண்டு செல்ல போகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.


Tags:    

Similar News