செய்திகள்
முல்லா ஹசன் அகுந்த்

ஆப்கானிஸ்தான் பிரதமர் ஆகிறார் முல்லா ஹசன் அகுந்த்: யார் இவர்?

Published On 2021-09-09 02:00 GMT   |   Update On 2021-09-09 02:00 GMT
கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவர் இவர் தான்.
காபூல் :

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து கடந்த மாதம் 15-ந்தேதி தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை முழுமையாக ஆக்கிரமித்தனர்.

அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைப்பதற்கான பணிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.

தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதர் புதிதாக அமையும் அரசின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஹக்கானி வலைக்குழுவுக்கும்‌ முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையிலான அதிகார போட்டி காரணமாக புதிய அரசு அமைவதில் காலதாமதம் நிலவி வந்தது.

இந்த நிலையில் தலிபான்கள் நேற்று முன்தினம் புதிய இடைக்கால அரசை அறிவித்தனர். பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் பதவியேற்பு விழா எப்போது நடைபெறும், தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார்கள் என்பன போன்ற விவரங்களை தலிபான்கள் தெரிவிக்கவில்லை.

இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த் முந்தைய தலிபான்கள் (1996-2001) ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்துள்ளார்.

தலிபான்கள் ஆட்சியில் அவர் துணை பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். முல்லா ஓமருடன் சேர்ந்து தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர்.

கடந்த 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவர் இவர் தான்.

இதைத்தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முல்லா ஹசன் அகுந்தை தனது பயங்கரவாத தடுப்பு பட்டியலில் சேர்த்தது. இப்போதும் ஐ.நா. தடைப்பட்டியலில் அவரது பெயர் உள்ளது‌ குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News