செய்திகள்
தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர்

ஹக்கானி குழுவுடன் மோதல்: தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் காயம்

Published On 2021-09-07 02:09 GMT   |   Update On 2021-09-07 02:09 GMT
புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.
காபூல் :

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலிபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.

இந்த புதிய அரசில் தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார்.

அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமையும் என தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜபிஹுல்லா முஜாஹித் நேற்று கூறினார்.
Tags:    

Similar News