செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தாமதம்

Published On 2021-09-05 09:02 GMT   |   Update On 2021-09-05 09:02 GMT
தலிபான் அமைப்பில் பல்வேறு குழுக்கள் உள்ளன. அந்த குழுக்களை சேர்ந்த தலைவர்கள் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாடு தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்தனர். இதையடுத்து அங்கு புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார்கள். இதற்காக தலிபான்களின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ‌ஷரியத் சட்டப்படி தான் ஆட்சி நடக்கும் என்று தெரிவித்த தலிபான்கள் புதிய அரசில் யார்-யாருக்கு என்னென்ன பதவிகள் அளிப்பது என்பது தொடர்பாகவும், யார் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்தனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் இடையே ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை.

புதிய அரசு தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுவதாக தலிபான்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபி ஹூல்லா முஜாஹித் கூறும்போது, ‘புதிய அரசு தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய அரசு மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றார்.

ஆனால் எதற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

தலிபான் அமைப்பில் பல்வேறு குழுக்கள் உள்ளன. அந்த குழுக்களை சேர்ந்த தலைவர்கள் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. புதிய அரசின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஈரான் நாட்டு பாணியில் தலைமை மத குருவை உச்ச நிலை தலைவராக கொண்ட ஆட்சி அமைக்கப்படும் என்றும், அதில் தலைமை மத குருவாக தலிபான் தலைவர் முல்லா அகுஸ்ட்டாவும், அதிபராக முல்லா அப்துல் கனி பராதரும் பொறுப்பேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் முல்லா அப்துல் கனி பராதருக்கு அதிபர் பதவி வழங்குவதில் பாகிஸ்தானுக்கு விருப்பம் இல்லை. தலிபான்களில் உள்ள முக்கிய குழுவான ஹக்கானி பாகிஸ்தானுடன் தொடர்புடையது.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசில் ஹக்கானிக்கு அதிக முக்கியத்துவம் பெற்றுத்தர பாகிஸ்தான் விரும்புகிறது. இதையடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ். தலைவர் பைஸ் ஹமீது காபூல் நகருக்கு சென்றுள்ளார்.

புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் ஐ.எஸ். தலைவர் குழு தலிபான்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இது குறித்து புதிய அரசை உருவாக்குவதற்கான ஆலோசனை குழு உறுப்பினரான கலில் ஹக்கானி கூறும்போது, ‘தலிபான்களால் தன்னிச்சையாக ஆட்சி அமைத்துவிட முடியும்.

ஆனால் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் அரசை அமைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இதனால் அரசு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

தலிபான் அமைப்பில் பெரும்பாலும் பஷ்துன் இனத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். இதனால் புதிய அரசில் அந்த இனத்தை சேர்ந்தவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு மற்ற குழுக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து புதிய அரசில் பஷ்துன் இனம் அல்லாதவர்களையும் சேர்க்க தலிபான்கள் விரும்புகின்றனர். மேலும் ஏற்கனவே தலிபான் அரசில் இடம் பெற்றிருந்த முன்னாள் பஷ்துன் மற்றும் பஷ்துன் அல்லாத இனத்தவர்களை சேர்க்க தலிபான்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

அவர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க தலிபான்கள் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற காரணங்களால் புதிய அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... 5 ஆயிரம் பெண்களை திரட்டி டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்

Tags:    

Similar News