செய்திகள்
கொரோனா தடுப்பூசி

சீனா வழங்கிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்த வட கொரியா

Published On 2021-09-02 22:39 GMT   |   Update On 2021-09-02 22:39 GMT
வடகொரியா தடுப்பூசிகளை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 20 லட்சம் டோஸ் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்தது.
பியோங்யாங்:

உலகில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே வடகொரியா கடும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அது தனது எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டது.

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. சுகாதாரப் பணியாளர்கள், காய்ச்சல் உள்பட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டவர்கள் என 32,291 பேர் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன.



இந்நிலையில், சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய தடுப்பூசி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை வடகொரியாவுக்கு வழங்க ரஷ்யா பல முறை முன்வந்ததாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் கடந்த ஜூலை மாதம் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
Tags:    

Similar News