செய்திகள்
ஜோபைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் இல்லை - ஜோபைடன்

Published On 2021-08-11 15:09 GMT   |   Update On 2021-08-11 15:09 GMT
ஆப்கானை மீட்கவும், பாதுகாக்கவும் அந்த நாட்டு தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் அங்கு தலிபான்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோபைடன் பதவி ஏற்றதும், ஆப்கானில் இருக்கும் அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அதன்படி ஆப்கானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன.

அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும், ஆப்கானில் தலிபான்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆப்கான் எல்லையோர பகுதிகளில் இப்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானின் எல்லையோர மாகாணங்களை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலிபான்களை சமாளிக்க முடியாமல் ஆப்கான் அரசு படைகள் திணறி வருகிறது.

ஆப்கான் படைகள், தலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஆப்கானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகும் ஆப்கானின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும். அதே நேரம் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் ஆகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. வருகிற செப்டம்பர் 11-ந்தேதிக்கு முன்பு அனைத்து படைகளும் முழுமையாக திரும்ப பெறப்படும்.

கடந்த 20 ஆண்டுகளில் பல இழப்புகளை சந்தித்து விட்டோம். இனியும் இத்தகைய இழப்புகளை சந்திக்க விரும்பவில்லை. ஆப்கானை மீட்கவும், பாதுகாக்கவும் அந்த நாட்டு தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். இணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News