செய்திகள்
நிரவ் மோடி

நாடு கடத்துவதற்கு எதிராக நிரவ் மோடி அப்பீல் செய்யலாம்- பிரிட்டன் ஐகோர்ட் அனுமதி

Published On 2021-08-09 14:13 GMT   |   Update On 2021-08-09 14:13 GMT
நிரவ் மோடியை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால், உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம் என அவரது வழக்கறிஞர் குழு முன்வைத்த வாதம் ஏற்புடையது என நீதிபதி கூறினார்.
லண்டன்:

வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்னர், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார்.

குற்றவாளியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை மந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவர் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில் நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கான பணிகள் தொடங்கின.

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். முதலில் அவரது மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. அதன்பின்னர் மீண்டும் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மன நலம் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் நிரவ் மோடி மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

நிரவ் மோடியை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால், உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம், சிறையில் அவர் தற்கொலை செய்வதற்கான அதிக ஆபத்து பற்றி, அவரது வழக்கறிஞர் குழு முன்வைத்த வாதங்கள் ஏற்புடையது என நீதிபதி கூறினார். 

நிரவ் மோடியின் மனநலம் அடிப்படையில் இன்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அவர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
Tags:    

Similar News