செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்காவில் 70 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2021-08-03 05:31 GMT   |   Update On 2021-08-03 05:31 GMT
அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தார்.

தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்திய அவர் மக்கள் தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

மேலும் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ந் தேதிக்குள் அமெரிக்காவில் தகுதி வாய்ந்தவர்கள் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது.

ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4-ந் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு நேற்று எட்டப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு ஜோ பைடன் நிர்வாகம் தனது இலக்கை அடைந்துள்ளது.


அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தெற்கு, மத்திய மேற்கு இளைஞர்களிடம் தடுப்பூசி செலுத்தும் விகிதங்கள் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டால் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Tags:    

Similar News