செய்திகள்
குண்டுவெடிப்பு

தொழிலாளர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்- சீனா கடும் கண்டனம்

Published On 2021-07-14 10:08 GMT   |   Update On 2021-07-14 10:31 GMT
பாகிஸ்தானில் சீன நிதியுதவியுடன் நடைபெறும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரிவினைவாத குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் இன்று சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பேருந்து தீப்பிடித்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 9 சீன தொழிலாளர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்த  தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனத்தின் திட்டத்தை குறிவைத்து  தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சீன நிறுவனங்கள் பாதுகாப்பை நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், 
தாக்குதல்
 நடத்திய குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  

இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கி உள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்துவருகின்றன. சீனா உதவியுடன் நடைபெறும் திட்டங்களால் உள்ளூர்வாசிகளுக்கு குறைந்த அளவே பலன் கிடைப்பதாகவும், பெரும்பாலான வேலைகள் வெளியாட்களுக்குச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags:    

Similar News