செய்திகள்
அந்தோணி பாசி

டெல்டா வகை கொரோனா அமெரிக்கர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்- மூத்த நிபுணர் எச்சரிக்கை

Published On 2021-06-23 09:55 GMT   |   Update On 2021-06-23 09:55 GMT
அமெரிக்காவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் நல்ல செயல்திறனை கொண்டுள்ளது.
வாஷிங்டன்:

உலகை அச்சறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்தது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவுக்கு ஆல்பா என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. அதேபோல் மற்ற நாடுகளில் உருமாறிய வைரஸ்களுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டெல்டா வகை கொரோனா வரைஸ் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆல்பா கொரோனாவை விட டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றும் எனவே டெல்டா வகை கொரோனா உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் டெல்டா வகை கொரோனா அமெரிக்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அந்நாட்டு மூத்த தொற்று நோய் நிபுணர் அந்தோணி பாசி  தெரிவித்துள்ளார்.

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவில் வைரஸ் நோய் தொற்று முற்றிலும் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இந்த வகை கொரோனா, மிகவும் வேகமாக பரவக்கூடியது. அதிக வீரியம் கொண்டது. அமெரிக்காவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் நல்ல செயல்திறனை கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் 20 சதவீதம் பேர் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News