செய்திகள்
கோப்புப்படம்

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா? - ஆய்வு தகவல்கள்

Published On 2021-06-22 18:45 GMT   |   Update On 2021-06-22 18:45 GMT
உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிய விடப்பட்டதாக அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது பரபரப்பு தகவல் வெளியிட்டு அதிர வைத்தார்.
மான்செஸ்டர்:

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்பொருட்கள் சந்தையில் இருந்துதான் 2019-ம் ஆண்டு இறுதியில் பரவியதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால், உகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கொரோனா வைரஸ் கசிய விடப்பட்டதாக அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது பரபரப்பு தகவல் வெளியிட்டு அதிர வைத்தார். இதை சீனா நிராகரித்தது.

ஆனால், உகான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் பலரும் உடல்நலம் பாதித்து 2019 இறுதியில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதாக அமெரிக்க உளவு அறிக்கையில் வெளியான தகவல்கள், உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற ஊகத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் உண்மையிலேயே தோன்றியது எங்கே என்பதை கண்டறிய அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடியில் இறங்கினார்.



இதுபற்றி உறுதியான முடிவுக்கு வருகிற விதத்தில், தகவல்களை சேகரித்து, 90 நாளில் வழங்குமாறு கடந்த மாத கடைசியில் அவர் அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்தது என்ற டிரம்ப் குற்றச்சாட்டு, மறுபடியும் வலுப்பெறத் தொடங்கி உள்ளது. இதை டிரம்ப் ஆதரவாளர்கள் சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதுபற்றி ‘கான்வர்சேஷன்’ என்ற இணைய தளத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்று சுமார் 30 சதவீத அமெரிக்கர்கள் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கொரோனா வைரசுக்கு மரபணு பொறியியலின் வெளிப்படையான எந்தவிதமான குணாதிசயங்களும் இல்லை என சான்றுகள் இருந்தபோதும் அமெரிக்க மக்கள், உகான் ஆய்வுக்கூடம் மீதான குற்றச்சாட்டை நம்புகிறார்கள்.

* ஆய்வுக்கூடத்தில் கொரோனா தோன்றியதாக கூறும் குற்றச்சாட்டு இது மாதிரியான பிற கருத்துகளுடன் சிக்கிக்கொண்டது மற்றொரு முக்கிய அம்சம். அவை, 5-ஜி கதிர்வீச்சினால்தான் கொரோனா ஏற்பட்டது, தடுப்பூசிகள் வாயிலாக மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மக்களிடையே மைக்ரோ சிப்களை பொருத்துகிறார்... இதெல்லாம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

* உகான் ஆய்வுக் கூட ஆராய்ச்சியாளர்கள் உடல்நலக்குறைவால் 2019 நவம்பரில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டதாக அமெரிக்க உளவு தகவல்கள் சொல்கின்றன. இது உண்மையானால், புதிய ஆதாரமாக அமைகிறது. ஆனால் இந்த தகவலை நிரகாரித்த ‘லான்செட்’ பத்திரிகையின் அறிக்கையின் பின்னால் இருந்த பீட்டர் தஸ்ஜாக், உகான் ஆய்வுக்கூடத்துடன் தொடர்பில் இருந்தார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும் அவர் அமெரிக்க அரசின் மானியம் பெற்ற ஆராய்ச்சி அமைப்பான ஈகோஹெல்த் அலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். லேன்செட் அறிக்கையே அமெரிக்கா, சீனா ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்ட கதை என்ற பேச்சும் உள்ளது.

சதி குற்றச்சாட்டுகள் மீண்டும் வருவது ஒன்றும் புதிது இல்லை. ஒரு முறை நிராகரிக்கப்பட்ட ஒன்று, மீண்டும் திரும்பி வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News