செய்திகள்
பிரதமர் யோஷிஹைட் சுகா

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

Published On 2021-06-15 22:23 GMT   |   Update On 2021-06-15 22:23 GMT
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
டோக்கியோ:

ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்றுடன் (புதன்கிழமை) முடிவடையும் இந்த கூட்டத்தொடரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்கவும் நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் பிரதமர் யோஷிஹைட் சுகா பல்வேறு சிக்கல்களை விவாதிக்க கூட்டத்தொடரை நீட்டிப்பது பொருத்தமற்றது என கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஜப்பானின் முக்கிய எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்டு, ஜனநாயக, அரசியலமைப்பு ஜனநாயக மற்றும் சமூக ஜனநாயக ஆகிய 4 கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக‌ நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நாடாளுமன்றத்தில் தாராளவாத ஜனநாயக கட்சி பெரும்பான்மை வகிப்பதால் இந்த தீர்மானம் எளிதில் தோற்கடிக்கப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News