செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை

Published On 2021-06-15 00:44 GMT   |   Update On 2021-06-15 00:44 GMT
பாகிஸ்தானில் உள்ள பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து மாகாணத்தின் அறக்கட்டளை சொத்து வாரியம், கராச்சியில் இந்து கோவில் அமைந்துள்ள நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. அந்த தனிநபர் கோவிலை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடத்தை எழுப்ப முடிவு செய்தார்.

இதனை எதிர்த்து சிறுபான்மையினர் நலனுக்கான ஒரு நபர் ஆணையம் சிந்து மாகாண ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்து கோவிலை இடிக்க அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிறுபான்மையினர் நலனுக்கான ஒரு நபர் ஆணையம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கராச்சியில் உள்ள இந்து கோவிலை இடிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த இந்து கோவிலை பாரம்பரிய சொத்தாக பராமரிக்க கராச்சி நகர நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News