செய்திகள்
பெஞ்சமின் நேட்டன்யாஹூ

இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் - அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க முடிவு

Published On 2021-05-31 20:16 GMT   |   Update On 2021-05-31 20:16 GMT
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.
ஜெருசலேம்:

இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாததால் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை அரசை அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. இப்படிப் பலவிதமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. எனவே அவரை பிரதமராக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் அங்கு கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News