செய்திகள்
நிலநடுக்கம்

புஜேராவில், அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்

Published On 2021-05-25 02:25 GMT   |   Update On 2021-05-25 02:25 GMT
அமீரகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான புஜேராவில் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியது.
புஜேரா:

அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் நிலநடுக்க ஆய்வு பிரிவின் இயக்குனர் காமிஸ் அல் ஷாம்சி கூறியதாவது:-

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது அடியில் உள்ள தட்டுகள் நகர்வதனால் ஏற்படும் அதிர்வாகும். இது டெக்டோனிக் தட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கமானியினால் (சீஸ்மோகிராப்) அளக்கப்படுகிறது.

இதில் பதிவாகும் அதிர்வுகள் 2 முதல் 2.9 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் இருந்தால் உணர்வது கடினமாகும். இதனை கருவிகள் மூலம் அல்லது தொங்கும் பொருட்கள் ஊசலாடுவதை வைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 3 முதல் 3.9 வரையிலான அளவுகள் சாலையில் செல்லும் லாரி ஏற்படுத்தும் அதிர்வுகளை போல் இருக்கும்.

4 அல்லது 4.9-க்கு இடையில் ரிக்டர் அளவுகள் பதிவானால் ஜன்னல்கள் உடையலாம், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் விழலாம். அதே வேளையில் 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். உதாரணமாக சுனாமி போன்ற பேரலை உருவாகக்கூடும்.

அமீரகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான புஜேராவில் நேற்று காலை அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திப்பா பகுதியில் உள்ள வாதி அல் ரஹீப் என்ற இடத்தில் அதிகாலை 5 மணிக்கு நிலத்தில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியது. மீண்டும் அதேபகுதியில் காலை 7.24 மணியளவில் 2.3 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.

இந்த பகுதியானது ஓமனுடன் இணைந்துள்ள ஆக்டிவ் பால்ட் லைன் என்னும் நிலநடுக்க கோட்டையொட்டி அமைந்துள்ளது. எனவே ஆண்டுக்கு 3 முதல் 4 முறை இதுபோன்ற நிலநடுக்கம் சிறிய அளவில் ஏற்படலாம். இது சாதாரணமானவைதான். கடந்த 2002-ம் ஆண்டில் புஜேராவில் உள்ள மசாபி பகுதியில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதுதான் கட்டிடங்கள், சுவர்களில் சேதத்தை ஏற்படுத்தியது. அமீரகத்தில் 6 முதல் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News