செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு

Published On 2021-05-11 09:28 GMT   |   Update On 2021-05-11 09:28 GMT
பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம்.
நியூயார்க்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 9421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,56,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பி.1.617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவலின் வேகம் கவலையளிப்பதாக உள்ளது. எங்களின் தொற்றுநோய் தடுப்பு குழு, ஆய்வகக் குழுவினர் சேர்ந்து, உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம பணிக்குழுவுடன் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆலோசித்தோம்.

இந்த வைரஸின் பரவல் தன்மை, இந்தியாவில் பரவி வருவது, மற்ற நாடுகளில் பரவல் சூழல் ஆகியவை குறித்து ஆலோசித்தோம் இந்த ஆலோசனை மற்றும் ஆய்வில், பி-1617 வகை வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகரித்துள்ளது. இதனால்தான் உலகளவில் இந்தியாவில் பரவும் பி-1617 வகை வைரஸ் பற்றி ஆழ்ந்த கவலை உருவாகியுள்ளது.

பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம். இந்த வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை பற்றி எங்களுக்குத் தெரியும். இதுபற்றி இந்தியாவிடமும் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்.

புதிது புதிதாக உருமாற்ற கொரோனா வைரஸ்கள் இன்னும் தொடர்ந்து வருமா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம். உலகளவில் இந்த உருமாற்ற கொரோனா வைரஸ்கள் கவலையளித்துள்னன. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உண்மையாக ஏதாவது செய்ய வேண்டும், தொற்றைக் குறைக்க வேண்டும், உயிரிழப்பை தடுக்க வேண்டும். இதற்கான கருவிகள் நம்மிடம் உள்ளன.

ஒருவர் எங்கு வாழ்கிறார், என்ன மாதிரியான வைரஸ்கள் பரவுகிறது என்பது பிரச்சினையில்லை. வைரஸ் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை உறுதியாக எடுக்க வேண்டும். தனிமனிதர்கள் அளவில் சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல், காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தல், வீட்டிலேயே பணி செய்தல் போன்றவை வைரஸ் பரவலைத் தடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News