செய்திகள்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

“இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது” - கமலா ஹாரிஸ்

Published On 2021-05-07 23:24 GMT   |   Update On 2021-05-07 23:24 GMT
இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா அதிக பாதிப்புகளை சந்தித்தது. அந்த சமயத்தில் இந்திய அரசு சார்பில், அமெரிக்காவிற்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய பல்வேறு நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவிற்கு கொரோனா நிவாரணம் வழங்குவது குறித்து வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“உங்களில் பலருக்கு தெரியும், என் குடும்பத்தின் தலைமுறைகள் இந்தியாவில் இருந்து வந்தவை. என் அம்மா இந்தியாவில் பிறந்து வளர்ந்தார். எனது குடும்ப உறுப்பினர்கள் இன்றும் இந்தியாவில் வசித்து வருகின்றனர். 

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

இந்தியாவின் நலன் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலைமை மோசமடைய துவங்கியதும், எங்கள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கடந்த ஏப்ரல் 26-ந் தேதி, அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமருடன் பேசினார். அதை தொடர்ந்து ஏப்ரல் 30-ந் தேதிக்குள், அமெரிக்க இராணுவம் மற்றும் பொதுமக்கள் இந்தியாவிற்கு தேவையான நிவாரணங்களை அனுப்ப தொடங்கிவிட்டனர்.

அதே சமயம் அறிவுசார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்கும் நிலைப்பாட்டிற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை செலுத்த முடியும். 

அமெரிக்காவிற்கு தேவையான காலத்தில் இந்தியா உதவியது. தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்குள் 6 விமானங்களில் உதவிப்பொருட்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News