செய்திகள்
நீரவ் மோடி

நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்

Published On 2021-04-16 14:50 GMT   |   Update On 2021-04-16 14:50 GMT
இந்திய அரசின் தொடர் நெருக்கடியால், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர்.
லண்டன்:

வைர வியாபாரியான நீரவ் மோடி, கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும், தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை தொடர்ந்து இந்திய அரசின் தொடர் நெருக்கடியால், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மறைவாக இருந்த நீரவ் மோடியை, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். அதன் பின் அவரை மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் அமலாக்கத் துறையும் சிபிஐயும் ஈடுபட்டது. இதற்காக அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்ததை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்திய நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகி பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து, வைர வியாபாரி நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலை, இங்கிலாந்து உள்துறை அமைச்சர் வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News