செய்திகள்
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மருந்து

ஆஸ்திரியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

Published On 2021-03-07 14:18 GMT   |   Update On 2021-03-07 14:18 GMT
தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்ணுக்கு, ரத்தம் உறைதல் அதிகரித்து, அதன் காரணமாக நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.
சூரிச்:

ஆஸ்திரியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.  இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 49 வயது பெண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவரது ரத்தம் கடுமையாக உறைந்து அதன் விளைவாக அவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் 35 வயது நிரம்பிய பெண் தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகு, ரத்தம் உறைதல் அதிகரித்து, அதன் காரணமாக நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வருகிறார்.

இந்த இரண்டு பெண்களும் தடுப்பூசியால்தான் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சுகாதார பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அஸ்ட்ராஜெனேகா மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். 
Tags:    

Similar News