செய்திகள்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மற்றும் அயத்துல்லா அலி அல் சிஸ்தானி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த பட

ஈராக்கில் ஷியா முஸ்லிம் மத தலைவருடன் போப் ஆண்டவர் சந்திப்பு

Published On 2021-03-06 18:49 GMT   |   Update On 2021-03-06 18:49 GMT
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார்.
பாக்தாத்:

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் பிரான்சிஸ் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றடைந்தார். அங்கு அவரை ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி நேரில் வரவேற்றார்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் தனது ஈராக் பயணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய போப் பிரான்சிஸ் ‘‘நான் ஈராக் வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ‘நாகரிகத்தின் தொட்டில்'. இங்கு ஆயுத மோதல்கள் இன்றி அமைதியாகட்டும். வன்முறை, பயங்கரவாதம், பிரிவினை மற்றும் சகிப்பின்மை போன்றவை முடிவுக்கு வரட்டும். ஈராக் பல போர்களில் பேரழிவு விளைவுகளை சந்தித்துள்ளது’’ என்றார்.

மேலும் அவர் ‘‘இந்த நிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், இந்த தேசத்தின் வாழ்க்கைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள், ஒரு வளமான பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. தவிர, தங்களது இந்த பணியை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகின்றனர்’’ என்று கூறினார்.

போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கி 4 நாட்களுக்கு ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஈராக்கில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் மேற்கொள்ளும் இந்த பயணம் ஆபத்தான பயணமாக கருதப்படுகிறது.

ஆனால் ஈராக் பல ஆண்டுகளாகத் துன்பத்துக்கு ஆளாகியிருப்பதால், தாம் அங்கு செல்லக் கடமைப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது பயணத்தின் 2-வது நாளான நேற்று போப் பிரான்சிஸ், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியை நேரில் சந்தித்து பேசினார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு ஈராக்கின் புனித நகரமான நஜாப்பில் நடைபெற்றது. பாக்தாத்தில் இருந்து துப்பாக்கி குண்டு துளைக்காத சிறப்பு காரில் பலத்த பாதுகாப்புடன் நஜாப் நகர் சென்றடைந்த போப் பிரான்சிஸ், அங்கு அல் சிஸ்தானியின் இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார்.‌

அதன் பின்னர் பூட்டிய அறைக்குள் சுமார் 50 நிமிடம் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை ஈராக்கில் சிறுபான்மை மக்களாக இருக்கும் கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் அரவணைக்கவும், அவர்களுக்கு அமைதியான சகவாழ்வின் செய்தியை வழங்கவும் வலியுறுத்தியது.

ஈராக்கில் கிறிஸ்தவ குடிமக்கள் அனைத்து ஈராக்கியர்களை போலவே அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழவேண்டும், அவர்களின் முழு அரசியலமைப்பு உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று இரு தலைவர்களும் தங்களது கவலையை உறுதிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News