செய்திகள்
மியான்மர் போராட்டம்

மியான்மரில் தொடரும் போராட்டம்... எல்லையில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியது இந்தியா

Published On 2021-03-05 14:57 GMT   |   Update On 2021-03-05 14:57 GMT
ராணுவத்துக்கு பயந்து மியான்மரில் இருந்து மேலும் பல போலீசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:

அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்துகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த பதற்றமான சூழலில், மியான்மரில் இருந்து போலீசார் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவினர். மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த போலீஸ்காரர்களை அந்த மாநில போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர். 

ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மியான்மரில் இருந்து மேலும் பல போலீசார் மற்றும் பொதுமக்கள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால், அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லைகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை மியான்மரில் இருந்து 30 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்படுமா அல்லது மியான்மருக்கு அனுப்பி வைக்கப்படுவார்களா? என்பது தொடர்பாக மத்திய அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Tags:    

Similar News