செய்திகள்
கோப்புப்படம்

ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்

Published On 2021-03-04 02:11 GMT   |   Update On 2021-03-04 02:11 GMT
அண்மைக்காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
பாக்தாத்:

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன.

அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் வரை அங்கு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈராக்கில் உள்ள ராணுவ மற்றும் விமான படைத் தளங்களில் முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அண்மைக்காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திசும் பலியானார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஈராக்கில் அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக அங்குள்ள அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அமெரிக்காவோ ஈராக்கில் இருந்து தங்கள் நாட்டு வீரர்கள் வெளியேற மாட்டார்கள் என்று உறுதியாக கூறியது. மேலும் படைகளை வெளியேற்ற ஈராக் வற்புறுத்தினால் அந்த நாட்டின் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என பகிரங்க மிரட்டல் விடுத்தது.

எனவே அமெரிக்க படைவீரர்களை ஈராக்கிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் ஈராக்கில் அவர்கள் தங்கியிருக்கும் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றனர்.

கடந்த மாதம் 16-ந் தேதி ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள இர்பில் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தங்கியிருந்த ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒரு அமெரிக்க வீரர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் பேரில் சிரியாவில் ஈராக் எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதோடு பயங்கரவாதிகளின் கட்டிடங்கள் பல நிர்மூலமாக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

இந்தநிலையில் ஈராக்கில் நேற்று மீண்டும் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து‌ ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தினர். ஈராக்கின் மேற்குப் பகுதியில் அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல் ஆசாத் விமானப்படை தளத்தில் ஈராக் வீரர்களுடன் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை வீரர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானப்படைத் தளத்தை குறிவைத்து நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர். அடுத்தடுத்து 13 ராக்கெட்டுகள் விமானப்படை தளத்துக்குள் விழுந்து வெடித்துச் சிதறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? அல்லது வீரர்கள் படுகாயம் அடைந்தார்களா? விமானப்படை தளத்துக்கு சேதம் ஏற்பட்டதா? என்பன உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இதனிடையே போப் ஆண்டவர் பிரான்சிசின் வருகைக்கு 2 நாட்களுக்கு முன்பாக ஈராக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பதும் இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News