செய்திகள்
ஏஞ்சலினா ஜோலி

வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி

Published On 2021-03-02 19:12 GMT   |   Update On 2021-03-02 19:12 GMT
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏலத்தில் விட்டார்.
லண்டன்:

இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார். இவர் கடந்த 1943-ம் ஆண்டு காசாபிளாங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொராக்கோ சென்றபோது, அங்குள்ள கவ்டவ்பியா மசூதியை கண்டு வியந்து அதனை தத்ரூபமாக ஓவியம் தீட்டினார். பின்னர் அவர் அந்த ஓவியத்தை அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்டுக்கு பரிசளித்தார்.

இந்த புகழ்பெற்ற ஓவியம் பல்வேறு நபர்களின் கைக்கு சென்று இறுதியாக கடந்த 2011-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கையில் வந்து சேர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தின் வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து தன்வசம் ஆக்கினார் ஏஞ்சலினா ஜோலி. இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் கவ்டவ்பியா மசூதியை நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏலத்தில் விட்டார்.

இந்த ஓவியம் 2 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடியே 38 லட்சத்து 22 ஆயிரம்)-க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் 7 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.71 கோடியே 33 லட்சத்து 97 ஆயிரம்)-க்கு ஏலம் போனது.
Tags:    

Similar News