செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை

Published On 2021-02-27 03:44 GMT   |   Update On 2021-02-27 03:44 GMT
அமெரிக்காவில் சாதனை அளவாக இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

உலகிலேயே கொரோனாவின் மிக மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது. அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள்படி நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இதுவரை 2 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 493 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

5 லட்சத்து 20 ஆயிரத்து 878 பேர் மீள முடியாமல் மரணம் அடைந்துள்ளனர்.

அங்கு தற்போது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தீவிரமாக போடப்பட்டு வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “எங்கள் நிர்வாகத்தின் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட எண்ணியுள்ளோம். அதில் பாதியளவை இப்போது அடைந்து இருக்கிறோம். ஆனாலும் இது ஓய்வு எடுக்க வேண்டிய தருணம் இல்லை. நாம் நமது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். கடவுளின் பொருட்டு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இதையெல்லாம் இப்போது அமெரிக்கர்கள் செய்வது முன்னேற்றம். அதிகமான மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். வேகமாக இந்த தொற்றுநோயை நாம் வெல்லப்போகிறோம்” என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் 65 வயது கடந்தவர்களில் 50 சதவீதத்தினரும், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களில் 75 சதவீதத்தினரும் தடுப்பூசி ஒரு டோஸ் பெற்றுக்கொண்டு விட்டதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News