செய்திகள்
கோப்புப்படம்

மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

Published On 2021-02-22 20:44 GMT   |   Update On 2021-02-22 20:44 GMT
மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
நேபிடாவ்:

மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கடந்த 1-ந்தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌

இந்தப் போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை மாண்டலே நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர். இது போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராணுவம் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றால் உயிர் இழப்புகள் ஏற்படலாம் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும் ராணுவத்தின் இந்த எச்சரிக்கையை மீறியும் மியான்மரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் வழக்கம்போல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தினர்.

போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக எங்கு பார்த்தாலும் ஒரு ராணுவ டாங்கிகள் அணிவகுத்து சென்றன. ஆனாலும் போராட்டக்காரர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் ராணுவ ஆட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலைகளில் பேரணியாக சென்றனர்.
Tags:    

Similar News