செய்திகள்
ஆங் சான் சூகி

மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2021-02-13 19:17 GMT   |   Update On 2021-02-13 19:17 GMT
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நேபிடாவ்:

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1-ந் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்கவும் மியான்மர் ராணுவத்தை வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நேற்று 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது.

போலீசாரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மாண்டலே ஆகிய நகரங்கள் மக்களின் தொடர் போராட்டங்களால் அதிர்ந்து வருகிறது.

நேற்று யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களின் பிரதான சாலைகளில் அணிவகுத்து சென்ற போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல் ரங்கூன் நகரில் உள்ள அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

இதற்கிடையில் மியான்மரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் துணை ஆணையா் நடா அல்-நஷீப், 'மியான்மரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையான உழைப்பின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை அண்மையில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சீரழித்துவிட்டது. இதனை உலக நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கிறது' என்று எச்சரித்தாா்.

அதனைத் தொடா்ந்து இங்கிலாந்தும் ஐரோப்பிய கூட்டமைப்பும் வரைவு தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மைன்ட் மற்றும் மற்ற அரசியல் தலைவா்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது வன்முறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு கண்காணிப்பு அதிகாரி தாமஸ் ஆண்ட்ரூஸ் தனது பணிகளை செவ்வனே மேற்கொள்வதற்கான உதவிகள், ஆதாரங்களை அளிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவா் மிஷெல் பஷேலே ஆகியோரை அந்த வரைவு தீா்மானம் கேட்டுக்கொண்டுள்ளது.

47 உறுப்பினா்களை கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வாக்கெடுப்பு நடத்தாமலேயே ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. இருப்பினும் ரஷியாவும், சீனாவும் இந்த ஒருமித்த கருத்தில் இருந்து தங்களை விலக்கிக் கொள்வதாக பின்னர் அறிவித்தன.
Tags:    

Similar News