செய்திகள்
டொனால்ட் டிரம்ப்

டிரம்ப் மீதான தகுதிநீக்க தீர்மானம்: பிப்ரவரி 8-ந்தேதி விசாரணை தொடக்கம்

Published On 2021-01-23 05:44 GMT   |   Update On 2021-01-23 06:07 GMT
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான விசாரணை பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது.
வாஷிங்டன்:

கடந்த நவம்பர் 3-ந்தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த புதன்கிழமை அதிபராக பதவி ஏற்றார்.
தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். ஆனால் ஜோபைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பினர் கோர்ட்டுகளில் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையே ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தில் கூட்டு கூட்டம் தொடங்கிய போது டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் 5 பேர் பலியானார்கள். வன்முறைக்கு டிரம்பின் பேச்சுக்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.

அதன்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தனர். அங்கு அந்த தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட டிரம்ப் மீதான தீர்மானம் பாராளுமன்ற மேலவையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

செனட் சபையில் அந்த தீர்மானத்தின் மீது விசாரணை நடத்தப்படும். இதற்கிடையே டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு நாளை மறுநாள் பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலேசி அனுப்பி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் டிரம்பின் தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 8-ந் தேதி தொடங்குகிறது.

இது குறித்து செனட் சபை பெரும்பான்மை தலைவர் சக் ஹூமர் கூறியதாவது:-

டிரம்பின் தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும். கட்சிகள் அந்த தீர்மானத்தின் சுருக்கங்கள் தயாரிக்கப்பட்டதும், அந்த தீர்மானம் மீது கட்சிகள் பேசிய பிறகு விசாரணை பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கும். இந்த விசாரணை வெளிப்படை தன்மையாகவும், முழுமையானதாகவும் இருக்கும். நியாயமாகவும் இருக்கும் என்றார்.

டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டால் அவர் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News