செய்திகள்
பாஸ்போர்ட்

இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க அபுதாபியில் மேலும் ஒரு மையம்- தூதரகம் தகவல்

Published On 2021-01-19 06:54 GMT   |   Update On 2021-01-19 06:54 GMT
அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க புதிதாக மேலும் ஒரு மையம் விரைவில் திறக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அபுதாபி:

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட்களை புதிதாக பெறுவதற்கும், புதுப்பிக்கவும் விண்ணப்பங்களை பெற தனியார் நிறுவனம்(பி.எல்.எஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது.

அபுதாபி நகரில் ஏற்கனவே 2 மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், அபுதாபி முசாபா பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு கூடுதலாக மேலும் ஒரு மையம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த புதிய மையமானது முசாபா தொழிற்பேட்டை பகுதியில் திறக்கப்படும். அபுதாபி தொழிலாளர் கோர்ட்டின் பின்புறம் இந்த மையம் அமைய இருக்கிறது.

இந்த புதிய மையம் தொடங்கப்பட்டதும் இப்பகுதியில் வசித்து வருபவர்கள் புதிய மையத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த மையத்தில் பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பங்கள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். விசா தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.

பாஸ்போர்ட்களை புதுப்பிப்பது தொடர்பாக விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டுப்பாடும் தற்போது கிடையாது. பொதுமக்கள் தங்களது பாஸ்போர்ட்கள் ஒரு வருடத்துக்குள் காலாவதியாக இருக்கும் போது விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கொரோனா பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட மாதத்துக்குள் காலாவதியாக இருக்கும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி பொதுமக்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 12 வயதுக்கு குறைவானவர்களும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நேரடியாக வந்து விண்ணப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள் தங்களது பாஸ்போர்ட் புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பங்களை மக்கள் தொடர்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News