செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி

Published On 2021-01-19 00:45 GMT   |   Update On 2021-01-19 00:45 GMT
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பீஜிங்:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.

உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடான சீனாவும் கொரோனா வைரசால் பொருளாதார சரிவை எதிர்கொண்டது. அதே சமயம் கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் தொடங்கி இருந்தாலும், முதலாவதாக அதில் இருந்து மீண்டு வந்ததும் சீனா தான். அதன் பிறகு அந்த நாடு பொருளாதார முன்னேற்றத்தில் தீவிர கவனம் செலுத்தியது.

இதன் மூலம் சீனாவின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியை கண்டுள்ளது.

சீன தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 2020-ம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.42 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 2.3 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 1976-ம் ஆண்டு சீன பொருளாதாரம் 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டது. அதற்கு பிறகு கடந்த ஆண்டில் தான் அந்த நாடு மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. அதேசமயம் கொரோனா தாக்கம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி காணலாம் என்று கருதப்பட்ட நிலையில், அது சற்று வளர்ச்சி கண்டுள்ளது. இது சீனா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளதையே காட்டுகிறது.
Tags:    

Similar News