செய்திகள்
ஜோ பைடன்

ஜோ பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை - இஸ்ரேல் தகவல்

Published On 2021-01-18 00:03 GMT   |   Update On 2021-01-18 00:03 GMT
ஜோ பைடனின் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்:

ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவது தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க திரும்புவதற்கான வாய்ப்பை கண்டுபிடிப்பதற்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது என்று ஜோ பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

எனினும் இதுகுறித்து ஈரான் தரப்பிலும், அமெரிக்கா தரப்பிலும் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
Tags:    

Similar News