செய்திகள்
அதிபர் முசவேனி ஆதரவாளர்கள்

உகாண்டா பொதுத்தேர்தல்- மீண்டும் வெற்றி பெற்றார் அதிபர் யோவேரி முசவேனி

Published On 2021-01-17 06:03 GMT   |   Update On 2021-01-17 06:03 GMT
உகாண்டாவில் நீண்டகாலமாக அதிபர் பதவியில் உள்ள யோவேரி முசவேனி இந்த முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
கம்பாலா:

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 1986ம் ஆண்டில் இருந்து என்ஆர்எம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் யோவேரி முசவேனி (வயது 76) அதிபராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், கடந்த 14ம் தேதி உகாண்டாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. யோவேரி முசவேனி மீண்டும் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து என்யுபி கட்சி சார்பில் முன்னாள் பாப் நட்சத்திரமான பாபி வைன் போட்டியிட்டார். இவர்கள் தவிர 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் யோவேரி முசவேனிக்கும், பாபி வைனுக்கும் இடையில்தான் நேரடி போட்டி நிலவியது. 



தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முசவேனி வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 6வது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்க உள்ளார். முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் அடக்குமுறைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான என்யுபி கட்சி தலைவர் பாபி வைன் குற்றம் சாட்டி உள்ளார். அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. 

இந்த தேர்தல் உகாண்டாவின் வரலாற்றில் மிகவும் மோசடி இல்லாத தேர்தலாக இருக்கும் என அதிபர் முசவேனி கூறினார்.

ஆனால், துண்டிக்கப்பட்ட இணையதள தொடர்புகள் மீண்டும் வழங்கப்படும்போது, வாக்குப்பதிவில் மோசடி செய்ததற்கான ஆதாரங்களை வழங்குவதாக பாபி வைன் கூறி உள்ளார். 

தேர்தலுக்கு முன்னதாக இன்டர்நெட் துண்டிக்கப்பட்டது. இதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தன்னையும் தன் மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் பாதுகாப்பு படையினர் தடுத்து வைத்திருந்ததாக பாபி வைன் குற்றம்சாட்டி உள்ளார். 
Tags:    

Similar News