இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி திட்டம் தொடங்கியதற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது மிக முக்கியமான படி... இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே
பதிவு: ஜனவரி 17, 2021 09:54
பிரதமர் மோடியுடன் ராஜபக்சே (கோப்பு படம்)
கொழும்பு:
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துடன், மிக முக்கியமான படியை எடுத்து வைத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு எனது வாழ்த்துக்கள். பேரழிவை ஏற்படுத்தி வரும் தொற்றுநோய் முடிவுக்கு வருவதற்கான ஆரம்பம்’ என்று கூறி உள்ளார்.
வாழ்த்து தெரிவித்த ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தடுப்பூசியின் விரைவான வளர்ச்சி மற்றும் அதன் அறிமுகம், ஆரோக்கியமான மற்றும் நோய் இல்லாத உலகத்திற்கான எங்கள் கூட்டு முயற்சியில் முக்கியமான அடையாளம் ஆகும் என்றும் மோடி கூறி உள்ளார்.
Related Tags :