செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை

Published On 2021-01-11 20:46 GMT   |   Update On 2021-01-11 20:46 GMT
கொரோனா உருவானது எப்படி என்று நேரடி விசாரணை நடத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் செல்கிறது.
பீஜிங்:

கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்கு விலங்குகள், பறவைகள், ஊர்வன ரகங்கள் ஆகியவற்றை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, உலக சுகாதார நிறுவனம், விசாரணை நடத்த 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, சீனாவின் உகான் நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்த விரும்பியது.

இதுபற்றிய தகவல் சீனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சீனா அனுமதி தராமல் இழுத்தடித்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் ஆதனம், சீனாவின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

இந்தநிலையில், உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது. இதை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

14-ந் தேதி, உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு வந்து நேரடி விசாரணை நடத்தும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்று கூறியுள்ளது.

இதன்மூலம், கொரோனா உருவானது பற்றிய விசாரணையில் நிலவிய தாமதம் முடிவுக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News