செய்திகள்
பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்

வன்முறையில் 4 பேர் பலி... டிரம்ப் மீது ஆட்சிக்கவிழ்ப்பு குற்றச்சாட்டு

Published On 2021-01-07 05:49 GMT   |   Update On 2021-01-07 05:49 GMT
அமெரிக்காவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது. தேர்தல் சபை வாக்குகளை எண்ணி முறைப்படி வெற்றிச் சான்றை வழங்குவதற்காக, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் தொடங்கியது. 

அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. 

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. 

இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை காவல்துறை உறுதி செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே வன்முறையின் மூலம் ஆட்சியை கவிழ்க்க அதிபர் டிரம்ப் சதி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த போராட்டங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான சவால்கள் ‘ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சி’ என்று செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் ஷுமர் குற்றம்சாட்டினார். தேர்தல் முடிவை பாராளுமன்றம் தீர்மானிக்கவில்லை, மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News