செய்திகள்
கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது

Published On 2021-01-06 18:53 GMT   |   Update On 2021-01-06 18:53 GMT
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீஜிங்:

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில், ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

சுமார் 6 மாதம் நீடித்த இந்த போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டங்கள், சீன ஆளுகைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது.

எனினும் ஹாங்காங் அரசின் உதவியோடு சீனா இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டத்தை ஒடுக்கியது. அதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற சீன விரோத போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த சட்டத்தை ஹாங்காங்கில் அமல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் சீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டதும் ஜனநாயக ஆர்வலர்கள் பலர் சீன அடக்குமுறையின் அச்சத்தால் ஹாங்காங்கை விட்டு வெளியேறினர். ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பல ஜனநாயக அமைப்புகள் கலைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக 2019-ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹாங்காங் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பதை அறிவதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து தன்னிச்சையாக பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

இந்த பொது வாக்கெடுப்பு அரசின் அனுமதியின்றி நடைபெற்றது. எனவே இது சட்டவிரோதமானது என அரசு எச்சரித்தது.

எனினும் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த வாக்கெடுப்பில் சுமார் 60 ஆயிரம் பேர் வாக்களித்தனர். ஆனாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்க இருந்த நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரசின் அனுமதியின்றி பொதுவாக்கெடுப்பு நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட 50 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹாங்காங் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கைக்காக ஹாங்காங்கில் நேற்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அவர்களை கைது செய்தனர்.

ஹாங்காங்கின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் 7 பேர், எதிர்க்கட்சி மாவட்ட கவுன்சிலர்கள் 21 பேர் மற்றும் பொது வாக்கெடுப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட 13 பேர் உள்பட மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பொது வாக்கெடுப்பு தொடர்பாக விளம்பரங்கள் மற்றும் செய்திகள் வெளியிட்ட 3 ஜனநாயக சார்பு செய்தி நிறுவனங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு நடந்த மிகப பெரும் கைது நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் இது சீன அரசாங்கத்தின் அடக்குமுறையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News