செய்திகள்
கோப்புப்படம்

இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் பொது போக்குவரத்து

Published On 2021-01-05 18:58 GMT   |   Update On 2021-01-05 20:09 GMT
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.
லண்டன்:

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை ரத்து செய்தன.

இதற்கிடையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 4-ம் படி நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 784 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.



இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடுமுழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) நடுப்பகுதி வரை அமலில் இருக்கும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் வரும் வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என போரிஸ் ஜான்சன் எச்சரித்தார். எனவே மக்கள் அனைவரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு களை மிகவும் கடுமையாக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ் நாடு முழுவதும் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் தொலைதூர கற்றல் முறைக்கு மாற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேபோல் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்காட்லாந்திலும் தளர்வு இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
Tags:    

Similar News