செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்ய டிரம்ப் திட்டம்?

Published On 2021-01-04 18:45 GMT   |   Update On 2021-01-04 18:45 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்யும் நோக்கத்துடன் டிரம்ப் ஜார்ஜியா மந்திரியுடன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் குடியரசு கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்பை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவர் வருகிற 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேசமயம் தேர்தல் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.

மேலும் எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பல்வேறு மாகாணங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

டிரம்ப் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டை நம்பியிருந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் கைவிரித்து விட்டது. இப்படி தொடர்ந்து பல பின்னடைவுகளை சந்தித்து வந்தாலும் டிரம்ப் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் பிடிவாதமாக உள்ளார்.

இந்த நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் தாம் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு மாகாண மந்திரி ஒருவரிடம் டிரம்ப் பேசும் ஆடியோ பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்தின் உள்துறை மந்திரியான பிராட் ராக்பென்ஸ்பெக்கரிடம் டிரம்ப் பேசிய ஆடியோ பதிவை அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டது.

அந்த ஆடியோ பதிவில் டிரம்ப், பிராட் ராக்பென்ஸ்பெக்கரிடம் “ஜார்ஜியா மக்கள் கோபமாக உள்ளனர். நாடு முழுவதும் மக்கள் கோபமாக உள்ளனர். எனவே வாக்குகளை நீங்கள் மீண்டும் கணக்கிட்டீர்கள் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. நான் செய்ய விரும்புவது இதுதான். எனக்கு 11,780 வாக்குகளை தயார் செய்ய நான் விரும்புகிறேன். இது நம்மிடம் இருப்பதை விட அதிகம். ஏனென்றால் நாம் மாகாணத்தை வென்றுள்ளேம்” என கூறுகிறார்.

ஜார்ஜியா மாகாணத்தில் டிரம்ப் ஜோ பைடனிடம் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டிரம்பின் கூற்றுக்களை மந்திரி பிராட் ராக்பென்ஸ்பெக்கர் நிராகரித்தார். டிரம்ப் சதி கோட்பாடுகளை நம்பியுள்ளார் என்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜார்ஜியாவில் 11,779 வாக்குகள் பெற்றது நியாயமானதாகவும், துல்லியமானதாகவும் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் அவர் டிரம்பிடம் “மதிப்பிற்குரிய ஜனாதிபதி, உங்களிடம் உள்ள சவால், உங்களிடம் உள்ள தரவு தவறானது. உங்களிடம் தகவல்களை சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள். அதேபோல் தகவல்களை சமர்ப்பிக்கும் எங்கள் மக்களும் எங்களிடம் உள்ளனர். பின்னர் அது நீதிமன்றத்தின் முன் வந்து நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் எண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். எங்கள் எண்கள் சரியானவை என்று நாங்கள் நம்புகிறோம்” என பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் தனது வெற்றிக்கு வாக்குகளை ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தானதாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவதும் அந்த ஆடியோ பதிவு இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News