செய்திகள்
நவாஸ் ஷெரீப்

பிப்ரவரி மாதம் 16-ந் தேதி நவாஸ் ஷெரீப் பாஸ்போர்ட் ரத்து

Published On 2021-01-01 03:18 GMT   |   Update On 2021-01-01 03:18 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ரத்து செய்யப்படும் என பாகிஸ்தான் உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 70), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக லண்டன் சென்றவர் நாடு திரும்பவில்லை.

3 முறை பிரதமர் பதவி வகித்த அவர் 2 ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் பல முறை கோர்ட்டு எச்சரித்தும் ஆஜராக தவறியதால் அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

இந்தநிலையில், பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ர‌ஷீத் அகமது நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நவாஸ் ஷெரீப் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்’’ என அறிவித்தார். ஆனால் அவர் இது தொடர்பான விரிவான தகவல்களை வழங்கவில்லை.

இதற்கிடையே பிரதமர் இம்ரான்கானின் ஆலோசகர் மிர்சா ‌ஷாஜாத் அக்பர் கூறும்போது, ‘‘கோர்ட்டுகளால் தண்டிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது’’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News