செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட அகதிகள் முகாம்

லெபனானில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து - இரு தரப்பு மோதலால் விபரீதம்

Published On 2020-12-27 20:22 GMT   |   Update On 2020-12-27 20:22 GMT
லெபனான் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்த சிலருக்கு இடையே நடந்த தனிப்பட்ட மோதலில் அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.
பெய்ரூட்:

சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போர் காரணமாக லட்சக்கணக்கானோர் சிரியாவை விட்டு வெளியேறி லெபனான், துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், லெபனானின் மினியஹ் மாகாணம் பக்னைன் நகரில் அகதிகள் முகாம் ஒன்றை அமைந்துள்ளது. அந்த முகாமில் சிரியாவை சேர்ந்த 370-க்கும் அதிகமான அகதிகள் வசித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த முகாமில் வசித்துவந்த சிரியாவை சேர்ந்த சில அகதிகளுக்கும், உள்நாடான லெபனானை சேர்ந்ந்த சிலருக்கும் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. 

மோதல் முற்றிய நிலையில், ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென சுட்டார். இதில் அகதிகள் முகாமில் தீப்பற்றியது.

தீ மளமளவென பரவியதால் அகதிகள் அனைவரும் முகாமை விட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் முகாமில் பற்றியை தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தீ வேகமாக பரவியதால் அகதிகள் முகாம் முழுவதும் தீக்கிரையானது. இந்த தீவிபத்தில் 4 பேர் படுகாயடைந்தனர்.

இந்த தீவிபத்து தொடர்பாக சிரியா அகதிகள் 6 பேர், லெபனானை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்தால் குடியிருப்புகள் அனைத்தும் எரிந்து நாசமானதால் அகதிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.   
Tags:    

Similar News