செய்திகள்
ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் - ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டு

Published On 2020-12-20 18:51 GMT   |   Update On 2020-12-20 19:15 GMT
அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும், பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என கூறினார்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது சைபர் தாக்குதலுக்கு ரஷியா அல்ல சீனா தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “சைபர் தாக்குதலின் பாதிப்புகள் உண்மையில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமையாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலையில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷியா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்பதற்கு ஊடகங்கள் பயப்படுகின்றன” என்றார்.

அதே சமயம் சைபர் தாக்குதல் தொடர்பாக சீனா மீது முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்த வித ஆதாரங்களையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News