செய்திகள்
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுப்பூசி போட்டுக்கொண்ட காட்சி

இஸ்ரேலில் முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர்

Published On 2020-12-20 03:11 GMT   |   Update On 2020-12-20 03:11 GMT
இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பிரதமர் நேதன்யாகு, முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
டெல் அவிவ்:

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் பைசர் தடுப்பூசிக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேலில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 

இதனை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு துவக்கி வைத்து, முதல் நபராக  தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி யூலி எடில்ஸ்டீன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனையத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெறுகிறது. முதற்கட்டமாக 40 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ரமத் கானில் உள்ள ஷேபா மருத்துவ மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நேதன்யாகு, நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததை இஸ்ரேலுக்கு மிகச் சிறந்த நாள் என்று பாராட்டினார். மேலும், இந்த மாத இறுதிக்குள் பல லட்சம் டோஸ்கள் மருந்து வர உள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தனிப்பட்ட முன்மாதிரியாக இருக்கவும், தடுப்பூசி போட உங்களை (மக்களை) ஊக்குவிக்கவும், சுகாதாரத்துறை மந்திரியுடன் இணைந்து நானும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டு, அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்றும் பிரதமர் கூறினார்.

இஸ்ரேலில் இதுவரை 3.72 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 3,070 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News